திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம், சத்திரம் மீட்பு | thirupporur kandasamy temple

thirupporur-kandasamy-temple
திருப்போரூரில் அறநிலையத் துறையால் மீட்கப்பட்ட கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான சத்திரம்.

திருப்போரூர்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் தெற்கு மாடவீதியில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் சத்திரத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.

திருப்போரூர் நகரில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமைவாய்ந்த கந்தசுவாமி கோயிலுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்நிலங்கள் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோயில் நிர்வாகம் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிலங்களை மீட்டு வருகிறது.

கந்தசுவாமி கோயிலின் தெற்கு மாடவீதியில் சர்வே எண் 270/16-ல் அன்ன சத்திரம் மற்றும் காலிநிலம் என 20 சென்ட் நிலம் அமைந்துள்ளன. இச்சொத்துகள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மயில் விளக்கு, தூங்கா விளக்கு ஆகிய கைங்கர்யங்கள் செய்வதற்காக அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கைங்கர்யத்துக்காக கந்தசுவாமி கோயில் நிர்வாக அதிகாரி அறக்கட்டளையின் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சொத்துகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து, கோயில் செயல் அலுவலர் சக்திவேல் இவற்றை ஆய்வு செய்து, மேற்கண்ட சொத்துகள் கோயிலுக்கு சொந்தமானவை என கண்டறிந்தார்.

மேலும், சத்திரம் மற்றும் காலி நிலத்தை மீட்கும் பணிகள் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் மூலம் நேற்று நடைபெற்றது. இச்சொத்துகள் அமைந்துள்ள பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து, ‘இவை கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகள்’ என அறிவிப்புப் பலகை அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.3 கோடி என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை