திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 2 ஆம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
இந்த திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர் காலையில் யாக சாலை மண்டபத்தில் எழுந்தருளினார். யாக சாலை முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடந்தது. இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சபரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்தடைந்தார்.
அதனைத தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.