வீதியில் தெருவிளக்கு இல்லை. 9 ஆண்டுகளாக ஆளும் எம்எல்ஏவால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் திமுகவின் மக்கள் கிராம சபையில் சொன்னார். இன்று அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள். இது திமுகவின் கிராம சபையால் தீர்ந்த குறை என்று முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இன்று (12-01-2021), திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி:
”மு.க.ஸ்டாலின் கிராம சபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்வர்! ஆம், நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன்தான்!
இதோ ஓர் ஆதாரம்:
கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெருவிளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் எம்எல்ஏவால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்!
யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதல்வரே!”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ட்வீட் இணைப்பு:
மக்கள் கிராமசபையினால் குறைகள் தீருமா எனக் கேட்ட @CMOTamilNadu-க்கு ஓர் ஆதாரம் இது!
கவுண்டம்பாளையம் தொகுதியில் 9 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க.விடம் சொன்னால் தீரும்.
4 மாதங்களில் ஆட்சி மாறும்; மக்களின் ஒவ்வொரு குறையும் தீர்வு பெறும். https://t.co/88y9OeXk4a
— M.K.Stalin (@mkstalin) January 12, 2021