திமுகவின் துரோகங்களை மக்கள் மறக்கவில்லை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி | People have not forgotten the betrayals of DMK: Tamil Nadu BJP leader L Murugan

திமுகவின் துரோகங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் திருப்பாலையில் நம்ம ஊர் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பலன் தரும். விளைபொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியும். இதனால் உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரிக்கின்றனர்.

மொழிக்கொள்கையிலும் திமுக நாடகமாடுகிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிகளைக் கற்பிக்கின்றனர். தலைவர்களைப் போற்றுவதில் பாஜக முன்னிலையில் உள்ளது.

பட்டியல் பிரிவில் உள்ள 7 சாதிகளை ஒன்றாகச் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது பாஜக. இதற்காக மாநில அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. மத்திய அரசு விரைவில் கோரிக்கையை நிறைவேற்றும்.

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழர்களுக்கு திமுக ஒருபோதும் பாதுகாப்பாக இருந்ததில்லை. இலங்கைப் படுகொலைகளுக்கு திமுகவே காரணம். இந்த துரோகங்களை மக்கள் மறக்கவில்லை. தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.

திமுகவில் அக்கட்சி பெண் எம்எல்ஏவுக்கே பாதுகாப்பு இல்லை. இதைக் கண்டிக்காமல் மற்ற பெண்களுக்காக கனிமொழி குரல் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. பாஜக தேர்தல் அறிக்கை மக்களுக்குப் பயன்படும் வகையில் இருக்கும்”.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

பாஜக பொதுச் செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன், ஊடகப் பிரிவுத் தலைவர் தங்கவேல்சாமி, செயலர் வீரபாண்டிமணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஹரிகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் ராஜா பாண்டியன் பாஜகவில் இணைந்தார்.

நன்றி இந்து தமிழ் திசை