திட்டக்குடி அருகே விபத்தில் கவிழ்ந்த காரில் ஏற்பட்ட தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு: 2 பேர் காயம் | Car fire near Tittakkudi; 3 killed: 2 injured

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் என்ற இடத்தில் சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (47) என்பவர் சென்னை அம்பத்தூரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை அவரும், அவரது தாயார் முத்துலட்சுமியும் காரில் சென்னைக்குப் புறப்பட்டனர். அப்போது தேனி அல்லநகரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (36), அவரது மனைவி செல்வராணி (30) மற்றும் அவரது மகன் ஸ்ரீசாய் ஆத்வி (5) ஆகியோரையும் அழைத்துக் கொண்டு சென்னை நோக்கிப் பயணித்தனர்.

திருச்சி அருகே ஒட்டலில் மதிய உணவு அருந்திவிட்டு, சுப்ரமணியன் காரை ஓட்ட மீண்டும் சென்னை நோக்கிப் பயணித்தனர். கார் கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த கல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சுப்ரமணியனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து தீ விபத்துக்குள்ளானது.

இதில் காரில் இருந்த சுப்ரமணியன் தாயார் முத்துலட்சுமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த சுப்ரமணியன் தீயில் கருகி உயிரிழந்தார். வேப்பூர் தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர்

காரில் பயணித்த முத்துக்குமார், அவரது மனைவி செல்வராணி மற்றும் மகன் ஸ்ரீசாய் ஆத்வி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீஸார் ஆகியோர் விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே செல்வராணி உயிரிழந்தார்.

முத்துக்குமாருக்கும், அவரது மகனுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திட்டக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி இந்து தமிழ் திசை