தாம்பரம் பணிமனையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பில் மெத்தனம்: பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த பயணிகள் வலியுறுத்தல் | tamabram women worker abused

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயிலில் பழம், காய்கறிகள் போன்ற பொருட்களை விற்கும் தொழில செய்து வருகிறார். கடந்த 8-ம் தேதி இரவு செங்கல்பட்டு செல்லும் ரயிலில் பயணித்துள்ளார். மதுபோதையில் அந்த பெண் ரயிலில் தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு ஆகிவிட்டதால் சேவை முடிந்தபிறகு அந்த ரயில் தாம்பரம் வந்து பணிமனைக்கு சென்றது.

தூக்கத்தில் இருந்து எழுந்த பெண், ரயில் பணிமனையில் இருப்பதை பார்த்துள்ளார். இரவு நேரம் என்பதால் அதிகாலையில் சென்றுவிடலாம் என நினைத்து ரயிலிலேயே தூங்கினார். அப்போது, ரயிலில் சுத்தம் செய்ய வந்த ஒப்பந்தப் பணியாளர்கள்,பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துஉள்ளனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸில் அந்த பெண் புகார் தெரிவித்துஉள்ளார்.

பயணிகள் அதிர்ச்சி

அதன்படி, தாம்பரம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் (30), சேலையூர் மப்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் ரயில்வே பணிமனையில் பெண் ஒருவருக்கு நடந்துள்ள இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் போன்ற பெரிய ரயில் நிலையத்திலேயே (பணிமனையில்) இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

சேவை முடிந்த பிறகு சோதனை

ஒவ்வொரு ரயில் முனையத்திலும் கடைசி ரயில் சேவை முடிந்தவுடன், இரவு நேரத்தின்போது ரயிலில் பயணிகள் யாராவது இருக்கிறார்களா என்று சோதனை செய்த பிறகே அந்த ரயிலை பணிமனைக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இந்த சோதனை தாம்பரம் ரயில் முனையத்தில் நடந்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பெண் பயணிகள் சிலர் கூறியதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூர் தவிர பெரும்பாலான ரயில் நிலையங்களில் போதிய அளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை, இரவு நேரங்களில் பெரும்பாலும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் இல்லாமல் இருப்பதை காண முடிகிறது.

ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தால் மட்டுமே அடுத்த சில வாரங்களுக்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. ஆனால், மற்ற நேரங்களில் பாதுகாப்பு விஷயங்களில் அலட்சியம் காட்டப்படுகிறது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் இறந்தபோது சில நாட்களுக்கு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் காட்டப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலான ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. ஒரு சில ரயில் நிலையங்களில் போதிய அளவு மின் விளக்குகள்கூட இல்லாமல் இருக்கின்றது. பொது போக்குவரத்து என்பதால் பாதுகாப்பு இருக்கும் என்று நம்பிதான் பெண்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், இது போன்ற அசம்பாவிதம் நடப்பது பெண் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ரயில் நிலையங்களில் முன்பைவிட தற்போது கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தாம்பரத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நிவாரணம் கிடைக்குமா?

பாதிக்கப்பட்ட பெண் ஏழ்மை நிலையில் ரயிலில் வியாபாரம் செய்துவருபவர். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. அவருக்கு உரிய நிவாரண உதவி கிடைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை