தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கற்கண்டு, வெல்லம் உள்ளிட்ட பனை பொருட்களை விற்க அரசு பரிசீலனை: சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி தகவல் | edappadi palanisamy

அனைத்து ரேஷன் கடைகளிலும் கற்கண்டு, வெல்லம் உள்ளிட்ட பனை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை அடுத்த மாங்காட்டில் நாடார் சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு, சாதனையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது:

எளிமைக்கே இலக்கணம் வகுத்துத் தந்த கர்ம வீரர் காமராஜரை தந்த நாடார் சமூகம், இந்த நாட்டுக்கு ஆற்றியிருக்கும் ஈடற்ற தொண்டாகவே கருதுகிறேன். இந்த சமூகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள் ஏராளம். கல்வி, சமூக சேவை, வணிகம், பத்திரிகை, அச்சுத்துறை, அரசியல் என பல துறைகளிலும் தங்கள் உழைப்பால் உச்சங்களை தொட்ட நாடார் சமுதாயம் உயர்ந்து நிற்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு உலகம் உற்றுநோக்கும் சாதனையாளராக திகழும் சிவ நாடார், உழைப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, தமிழ் இனத்திற்கு சமகாலத்தில் சர்வதேச அளவில் பெரும் அடையாளத்தையும், பெருமையையும் பெற்றுத் தந்திருக்கிறார். சென்னைக்கு அருகில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கும் அவரது நல்ல முயற்சிக்கு தமிழக அரசு பெரிதும் துணை நிற்கிறது.

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் வென்டிலேட்டர் வழங்க வேண்டும் என்று அவரை கேட்டுக் கொண்டேன்.தாராள மனப்பான்மையுடன் ஒரே நேரத்தில் ரூ.35 கோடி வழங்கிய அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று அவர் என்னை நாடி வந்தார். உண்மையிலேயே கல்வியாளர்களை உருவாக்குவதில் நாடார்சமூகம் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறது என்று நன்றாக தெரியும். அப்பல்கலைக் கழகத்தை சுமார் ரூ.500 கோடியில் அமைப்பதாக கூறினார். அதற்கு விரைவாக அனுமதி கொடுத்தேன்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காமராஜர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றுஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. பனையில் இருந்துகற்கண்டு, வெல்லம் போன்ற பொருட்கள் தயாரிக்கிறார்கள். எங்கள் பகுதியில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, இதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன்கடைகளிலும் பனை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்.

பெருந்தலைவர் காமராஜர் இந்த மண்ணில் இருந்து மறைந்திருக்கலாம். ஆனால், அவர் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கின்றன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜர் இவர்களெல்லாம் தெய்வத்தின் அருளால் நமக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக நாம் கருதுகிறோம். இப்படிப்பட்ட தலைவர்கள் தோன்றிய காரணத்தினால்தான், நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம்.

மக்களுக்காக உழைத்து, மறைந்த போற்றுதலுக்குரிய தலைவர்கள் இன்றைக்கும் மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த சாதனைகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இங்கே பேசியவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளில் எதையெல்லாம் எங்களால் நிறைவேற்ற முடியுமோ அவற்றை எங்களுடைய அரசு நிச்சயமாக செய்யும். விரைவாக தேர்தல் வரவுள்ளது. அதனால், இத்தேர்தலிலும் எங்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, க.பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் போதுமான இணைய வசதியில்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து மாணவர்கள் இணைய வகுப்புகளில் பங்கேற்க வசதியாக தினமும் 2 ஜிபி அளவுக்கு இலவச டேட்டா வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இணைய வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் , பொறியியல் கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69,047 மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு விலையில்லா தரவு அட்டைகள் (டேட்டா கார்டு ) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எல்காட் நிறுவனம் மூலம் வழங்கப்படும் இந்த தரவு அட்டைகளில் தினமும் 2 ஜிபி அளவுக்கு இணைய சேவையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேலும் சிறப்புற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை