தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் மீனவர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொளுத்தும் வெப்பத்திற்கு மத்தியில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் மே. 27ம் தேதி வரை வெப்ப சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை குறைந்தபட்சமாக 28 – 29 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்சமாக 38 – 39 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். மேலும் மே. 25ம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல மே. 26, 27ம் தேதிகளில் இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி. மீ வேகத்திலும், இடையிடையே 55 கி. மீ வேகத்திலும் வீச கூடும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings