தமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல் | Makkal Needhi Maiam

தமிழகத்தில் மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது. மாற்றத்தை ஏற்படுத்துங்கள், நாளை நமதாகும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கோவை மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக விமானம் மூலம் நேற்று பிற்பகல் கோவை விமானநிலையத்தை வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர் தனியார் ஹோட்டலில் தொழில்துறையினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மசக்காளிபாளையம் சென்ற கமல்ஹாசன், அங்கு பொதுமக்களிடையே பேசியதாவது:

நான் செல்லும் இடமெல்லாம் மக்களின் அன்பு மழை பொழிகிறது. நான் ஐந்து வயது முதல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால், கைத்தட்டல், அன்பு, பாராட்டு எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டதுதான். ஆனாலும், இப்படியொரு அன்பை நான் எங்கும் பார்த்ததில்லை.

இந்த அன்பு எனக்கானது அல்ல. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறேன். மக்கள் ஆணையிட்டால் அது நிறைவேறும்.

எனக்கு கூட்டம் கூடுவதால், சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டம் என்று சிலர் கொக்கரிக்கின்றனர். உண்மையில் இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கூடும் கூட்டமாகும்.

கரோனா தொற்றுக் காலத்தில் கூட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். நான் கூட்டத்துக்குள் செல்லவில்லை. எனது குடும்பங்களுக்குள் செல்கிறேன். உங்கள் வீட்டின் விளக்காக என்னைப் பாருங்கள். அது அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் நிச்சயம் உங்கள் குடும்பங்களுக்கு ஒளியாக இருப்பேன். இது மாற்றத்துக்கான தருணம். மாற்றத்தை ஏற்படுத்துங்கள். நாளை நமதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று (ஜன. 11) துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அமைச்சர்களுக்கு நன்றி!

முன்னதாக, கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “எங்கள் கட்சிக் கொடி, பேனர்களை அகற்றியுள்ளனர். இது எங்களுக்கு கூடுதல் விளம்பரத்தையே கொடுத்துள்ளது. இதற்காக, அமைச்சர்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கொடிகளை அகற்றும் பணியில் காட்டும் ஆர்வத்தை, மக்கள் பணியில் காட்டியிருந்தால், நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம்” என்றார்.

நன்றி இந்து தமிழ் திசை