தஞ்சாவூர் டாஸ்மாக்கில் மது குடித்த 2 பேர் சாவு 4 பேர் சஸ்பெண்ட் | Two die in Thanjavur,
தஞ்சாவூர் மதுக்கூடத்தில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், உயிரிழப்புக்குக் காரணமாகக் கூறப்படும் சயனைடு வந்தது குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் கீழவாசல் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள மதுக்கூடத்தில் மது அருந்திய மீன் வியாபாரி குப்புசாமி (68), கார் ஓட்டுநர் விவேக் (36) ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக கிழக்கு காவல் நிலையத்தினர் மதுக்கூட உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவருமான செந்தில் நா. பழனிவேல், மதுக்கூட ஊழியர் காமராஜை ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில், இருவரது உடல்களிலும் சயனைடு விஷம் இருந்தது தெரியவந்தது. மதுக்கூடத்துக்கு சயனைடு வந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காகக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் வி. ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பிரித்விராஜ் செüகான் (பட்டுக்கோட்டை), ஜாபர் சித்திக் (திருவிடைமருதூர்), பிரபு (திருவாரூர்), ராஜ்குமார் (பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு), பி.என். ராஜா (தஞ்சாவூர்) ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்தனிப்படையினர் குப்புசாமி, விவேக் மீது யாரேனும் முன் விரோதம் கொண்டுள்ளனரா?, ஒரே பாட்டிலில் இருந்த மதுவை இருவரும் எப்படி பிரித்து அருந்தினர்? அந்த பாட்டிலில் இருந்த மதுவை வேறு யாருக்கும் பங்கு தரப்பட்டதா? விவேக்குக்கு உள்ள குடும்ப பிரச்னை காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுக்கூடத்தில் இருந்த மதுபாட்டில்கள், உணவு வகைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சயனைடு சாப்பிட்டு இறக்கும் அளவுக்கு இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சயனைடு எனக் கூறி, இருவரது மரணத்தையும் திசை திருப்ப காவல் துறையினர் முயற்சிப்பதாகவும் உறவினர்கள் புகார் எழுப்பினர். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை 7 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மாலையில் இருவரது உடல்களையும் உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.மதுக்கடை மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்: இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக மதுக்கூடம், டாஸ்மாக் மதுக்கடையிலும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செüந்தரபாண்டியன், தஞ்சாவூர் கோட்ட கலால் அலுவலரும், கோட்டாட்சியருமான (பொ) கோ. பழனிவேல், கலால் வட்டாட்சியர் ஆர். தங்கபிரபாகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மதுக்கடை மேற்பார்வையாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் சத்தியசீலன், திருநாவுக்கரசு, பாலு ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
GIPHY App Key not set. Please check settings