பொங்கல் பண்டிகையை சொந்தஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் நேற்று 1 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்து இன்று 1,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டில் வரும் 14 முதல்17-ம் தேதி வரை 4 நாட்கள் பொங்கல் பண்டிகை வருகிறது. பொங்கல்பண்டிகையொட்டி 3 நாட்களுக்கு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும் 10,228 பேருந்துகள்இயக்கப்பட உள்ளன. அதன்படி,சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு ஆர்வமாகப் புறப்பட்டுச் செல்கின்றனர். சென்னையில் இருந்து 176 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 2,226 பேருந்துகள்நேற்று இயக்கப்பட்டன. ஒரேநாளில் 1 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், இன்று மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வழக்கமாக இயக்கப்படும் 2,050 பேருந்துகளோடு, 1,950 சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளோம்’’ என்றனர்.