சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நீக்கம்: கரோனா பெருந்தொற்றில் மக்கள் சேவைக்கு பரிசா?- முதல்வர் தலையிட கி.வீரமணி வலியுறுத்தல் | Chennai Corporation cleaners fired: Corona reward for public service? – Chief Minister K. Veeramani urges intervention

கரோனா பெருந்தொற்றுக்காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிய சென்னை மாநகராட்சி தொழிலாளர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ள சென்னை மாநகராட்சியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“சென்னை மாநகராட்சியில் நகர சுத்தித் தொழிலாளர்கள் கரோனா கொடும் தொற்று நோய்க் காலத்திலும் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிவருபவர்கள். அவர்களின் பணி என்பது அடிப்படைச் சுகாதாரப் பணியாகும். சமூகத்திலும் அடித்தட்டில் கிடந்து உழலக் கூடியவர்கள்.

சென்னை மாநகராட்சி நகர சுத்தித் தொழில் பணியை சில வட்டங்களில் தனியாரிடம் ஒப்படைத்த நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர்கள்கூட பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்புதான் என்ற நிலையில், ஏற்கெனவே பணியாற்றியவர்களைப் பணி நீக்கம் செய்வது மனிதாபிமானமற்ற செயல் – தொழிலாளர் விரோதக் கொள்கையாகும். அந்தக் குடும்பங்கள் அடுத்தவேளை உணவுக்கு எங்கே செல்வார்கள்?

சென்னை மாநகராட்சியின் இந்த ஆணை திரும்பப் பெறப்படவேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியவர்களைக்கூட சற்றும் மனிதாபிமானற்ற முறையில் திடீரென்று வேலை நீக்கம் செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

முதல்வர் இதில் தலையிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட 5000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை