சென்னையில் நடைபெற்ற பாரம்பரிய கார்கள் கண்காட்சி: பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு மகிழ்ந்தனர் | heritage cars

‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ சார்பில் சென்னையில் நடைபெற்ற பாரம்பரிய கார்கள் கண்காட்சியை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ என்ற அமைப்பு, புராதன, பாரம்பரிய வாகனங்களை பாதுகாப்பது, புதுப்பிப்பது, அவற்றை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கிளப் மூலம் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வாகனப் பேரணி நடத்தப்படும். தற்போது கரோனா பரவல் ஊரடங்கு அமலில்உள்ள நிலையில், வாகன அணிவகுப்பை தவிர்த்து, கார்கள் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, ‘மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ சார்பில் பாரம்பரிய கார்கள் கண்காட்சி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. காவல்துறை ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இதில் பங்கேற்று, கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார்.

பின்னர் காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய வாகனங்களின் சிறப்புகள் மற்றும் வரலாறு குறித்து, வாகன உரிமையாளர்களிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து பழமையான பாரம்பரிய வாகனம் ஒன்றில் அமர்ந்து பயணித்தார்.

65 பாரம்பரிய கார்கள்

இக்கண்காட்சியில் 1886-ம் ஆண்டு உலகில் முதன்முதலில் பென்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார், 1896-ம் ஆண்டு போர்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மொத்தம் 65 பாரம்பரிய கார்கள், 25 பாரம்பரிய இருசக்கர வாகனங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாரம்பரிய வாகன விரும்பிகள் பார்வையிட்டுச் சென்றனர். பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளுடன் வந்து, பாரம்பரிய கார்களின் சிறப்புகள் மற்றும் வரலாறுகள் குறித்து தங்கள் குழந்தைகளுக்கு விளக்கினர். இளைஞர்கள் பலர் தங்கள் செல்போன்களில் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் தலைவர் பால்ராஜ் வாசுதேவன், செயலர் எம்.எஸ்.குகன், பொருளாளர் விஜி ஜோசப், ஏவிஎம் எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி இந்து தமிழ் திசை