செங்கோலின் வியக்க வைக்கும் வரலாறு
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டனால் வழங்கப்பட்டது இந்த செங்கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, சோழர் கால மாதிரி செங்கோலை ஒப்படைக்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியிடம் ஒப்படைத்தார் ஜவஹர்லால் நேரு. இதையடுத்து இந்த விழாவுக்கான திட்டங்களை ராஜாஜி தீட்டினார். செங்கோலை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு ஆன்மிக தலைவர் யாரை அழைக்கலாம் என ராஜாஜி எண்ணியபோது, அவரது நினைவுக்கு வந்தவர் திருவாவடுதுறை ஆதீனம். உடனடியாக திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்ட ராஜாஜி, செங்கோலை ஒப்படைக்கும் விழாவை நடத்திக் கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.
இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக திருவாவடுதுறை ஆதீனம் கூறினார். நள்ளிரவில் சுதந்திரம் பெறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக இந்த சம்பிரதாயங்கள் நடந்தன. முதலில் செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த குரு, மவுன்ட்பேட்டனிடம் வழங்கினார். பின்பு அது திரும்ப பெறப்பட்டது. அதில் கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதமராக பொறுப்பேற்கும் ஜவஹர்லால் நேருவிடம் கொண்டு செல்லப்பட்டது.
ஜவஹர்லால் நேருவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, அவரிடம் சோழர் கால மாதிரி தங்க செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த குரு வழங்கினார். அதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்டார்.
சோழர் கால மரபுப்படி கடந்த 1947-ம்ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.45 மணிக்கு தேவாரத்தில் கோளறு பதிகத்தில் உள்ள 11 பாடல்களை பாடுமாறு ஆதீனம் கூறியிருந்தார்.
அதன்படி வேயுறு தோளிபங்கன் எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலின் கடைசி அடியான, ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடித்தனர். அப்போது, ஆட்சி அதிகாரம் மாற்றத்தை குறிக்கும் வகையில் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், தங்க செங்கோலை நேருவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழக இந்து அறநிலையத் துறை கொள்கை குறிப்பிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings