சுசீந்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று தொடக்கம்: பக்தர்களுக்கு வழங்க லட்டு பிரசாதம் தயார் | Anjaneyar Jayanti Festival

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலின் உட்பிரகாரத்தில் ஒரேகல்லினால் ஆன 18 அடி உயரஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்குஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாஇன்றும், நாளையும் நடைபெறுகிறது.

இன்று காலை நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகாலை பூஜை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பு அபிஷேகங்கள் நாளை காலை 5 மணியில் இருந்து தொடங்குகிறது.

அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6.30 மணிக்கு ராமருக்கு புஷ்பாபிஷேகமும், 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்துள்ளது.

பக்தர்களுக்கு பார்சலில் அன்னதானம் வழங்குவதற்கு கோட்டாட்சியர் மயில் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அனுமதி வழங்கப்பட்டது. இதைப்போல ஆஞ்சநேயரின் பிரசாதமான லட்டு, தட்டுவடை, திருநீறு, குங்குமம் ஆகியவையும் பார்சலில் வழங்கப்படவுள்ளன.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சுசீந்திரம் கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பணி நேற்று நிறைவடைந்தது.

நன்றி இந்து தமிழ் திசை