சிவகங்கையில் தொடர் வழிப்பறி எதிரொலி, வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல். சிவகங்கை நகர் போலீசார் அதிரடி நடவடிக்கை.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, காளையார்கோயில் என பல இடங்களில்
வீடு, கோவில்களில் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவம், தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
மேலும் வீடுகளின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெறுகிறது இந்த குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் படி சிவகங்கை நகர் போலீசார் கடந்த ஒரு வார காலமாக திடீர் வாகன சோதனையில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஒட்டுவது தலைக்கவசம் அணியாதது, உரிய ஆவணம் இல்லாதது, அரசு விதிமுறையை மீறி நம்பர் பிளேட் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக சுமார் 200 இரு சக்கர வாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் உரிய ஆவணங்களை காட்டி 150 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அபராதம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 50 வாகனங்கள் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பல இருசக்கர வாகனங்கள் ஏற்கனவே திருடு போனதாக புகார் வந்துள்ள நிலையில், அதனை ஓட்டி வந்த நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற வாகன சோதனையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவ்வப்போது இது போன்று தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.