சிறையிலுள்ள மீனவர்களை பொங்கலுக்குள் மீட்க இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் | GK Vasan urges Sri Lanka to release imprisoned fishermen in Pongal

மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி, பொங்கலுக்கு முன்பாக இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மத்திய அரசு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு கடலோரக் காவல்படையைக் கொண்டு முழு பாதுகாப்பு கொடுப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நேற்று முன்தினம் நள்ளிரவில் வங்கக் கடலில், மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, சிறைப் பிடித்துச் சென்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கல்வீச்சு நடத்தி, மீன்பிடிச் சாதனங்களைச் சேதப்படுத்தி, 9 மீனவர்களை அச்சுறுத்தி கைது செய்து, ஒரு படகையும் பறிமுதல் செய்து சென்றனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல் நீடிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வெளியுறத்துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்று வந்த பிறகு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலையும், சிறைப்பிடித்துச் சென்றதையும் மத்திய அரசு இலங்கை அரசுக்கு கண்டிப்போடு எடுத்துக்கூற வேண்டும்.

மேலும் மத்திய அரசு இலங்கை அரசிடம் இலங்கை கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், சிறைப்பிடிப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.

குறிப்பாகத் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதற்கு முன்பாக இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் சுமார் 40 பேரை மீட்கவும், படகுகளைத் திரும்பப் பெறவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய – இலங்கை நட்புறவு நீடிக்க வேண்டுமென்றால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை அரசால் இனி எப்பிரச்சினையும் வரக்கூடாது என்பதை இந்திய அரசு இலங்கை அரசிடம் அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப பொங்கல் முதல் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் இலங்கையால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு விரைவாக இலங்கை அரசிடம் தொடர்புகொண்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை