
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுசெய்ய இன்னும் காலம் உள்ளது. பாமக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கிறது. பிற சமூகத்தினரை வஞ்சித்து, குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் சலுகைகள் வழங்க வேண்டும் என்பது தவறானது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோர் சமூகத்துக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எங்களது சமூகமும், பிற சமூகங்களைப்போல பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 27 ஆண்டுகள் உடனிருந்தவர் சசிகலா. 1991 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதா அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது உடனிருந்துள்ளார். சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவதை வரவேற்கிறோம். அதிமுக உண்மை விசுவாசிகளும் வரவேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.