கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்திடம் விசாரணை
கூட்டாளியை கொலை செய்த வழக்கில் ரௌடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (39) மீது வழிப்பறி, கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ரௌடிகள் பட்டியலில் இருந்து வந்தார். மேலும் இவர், ரௌடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி ஆவார். இந்த நிலையில், குன்னத்தூர் இரட்டைக் கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட செந்தில்குமாரை கருப்பாயூரணி போலீஸôர் தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த 2021 }இல் செந்தில்குமார் காணாமல் போனது தொடர்பாக, அவரது மனைவி முருகலட்சுமி, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தனது கணவரை கண்டுபிடித்துத் தரக் கோரி அவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதில், செந்தில்குமாரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தென்மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண் காரட் தலைமையில், காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட போலீஸôரைக் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினர் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஷாம்குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வரிச்சியூர் செல்வத்தைத் தனிப் படை போலீஸôர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், செந்தில்குமார் கொலை வழக்கு தொடர்பாக வரிச்சியூர் செல்வத்தை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கோரி தனிப் படை போலீஸôர், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணையின் முடிவில், நீதிமன்ற நடுவர் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். இதையடுத்து அவரை, அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விசாரணைக்காக போலீஸôர் கொண்டு சென்றனர்.