கிருஷ்ணகிரியில் கை கொடுத்த மழையால் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு | turmeric cultivation

கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் செடிகள் பயரிட்டுள்ளனர்.

தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் தினத்தன்று மஞ்சள் கொத்துகள் கட்டிய பானையில், புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விவசாயிகள் அனைவரும் கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் மஞ்சள் செடிகள் அறுவடைக்காக தயாராகி வருகின்றனர். கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனபள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்து வருவதால் மஞ்சள் பயிரிடப்படும் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. நிகழாண்டில் தென்கிழக்கு, வடகிழக்கு மழையை நம்பி சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மஞ்சள் நடவு செய்தனர். எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை கை கொடுத்ததால், மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் கூறும்போது, பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். மழை ஓரளவிற்கு பெய்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மஞ்சள் சாகுபடிக்கான தண்ணீர் தடையின்றி கிடைத்தது.

பொங்கலுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில் மஞ்சள் செடி அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் விழாவுக்கு பின்னர், மீதமுள்ள மஞ்சள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்லப்படும். கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. நிகழாண்டில் ஓரளவிற்கு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றனர்.

நன்றி இந்து தமிழ் திசை