கிரண்பேடியை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள்: பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் | CM Narayanasamy urges to withdraw Kiranbedi

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் இன்று (ஜன.08) போராட்டத்தை மறைமலை அடிகள் சாலையில் தொடங்கியுள்ளனர். இரும்புச் சங்கிலியால் பூட்டப்பட்ட ஆளுநர் மாளிகை படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

‘மோடியே கிரண்பேடியைத் திரும்பப் பெறு’, ‘கிரண்பேடியே திரும்பிப் போ’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

காலையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வர் நாராயணசாமி அப்பகுதியில் இருந்த வெங்கடசுப்பா ரெட்டியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி அவர் பேசியதாவது:

“டெல்லியில் விவசாயிகள் கடந்த 45 நாட்களாக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை விவசாயிகள் காட்டி வருகின்றனர். அதேபோல, பிரதமர் மோடிக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கிரண்பேடியைத் தூக்கியெறிய அமைதியான முறையில் நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

மத்திய அரசு புதுவையைப் புறக்கணிக்கிறது. ஆளுநர் கிரண்பேடி மாநில வளர்ச்சியைத் தடுக்கிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழகம், புதுவை மக்கள் ஏற்காத பல திட்டங்களை நம் மீது திணித்து வருகிறது. நாம் வைக்கும் கோரிக்கைகளை செவிகொடுத்துக் கேட்பதில்லை. புதுவைக்குத் தர வேண்டிய நிதி, மானியங்களைத் தருவதில்லை. தற்போது போராட்டத்தைத் தடுப்பதற்காக மத்தியப் படையைக் கொண்டுவந்து மிரட்டுகின்றனர். நம் நாட்டில் ஆளுநருக்கு எதிராக முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போராடிய சரித்திரமே கிடையாது.

கடந்த முறை போராடியபோது, கிரண்பேடி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்பதாக உறுதிமொழி அளித்து போராட்டத்தைக் கைவிடச் செய்தார். ஆனால், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதை கிரண்பேடி செய்யவே இல்லை. மத்திய அரசிடம் போராடிப் பெற்ற நிதி அதிகாரத்தைக் கூட வழங்கவில்லை. அமைச்சரவையில் முடிவெடுத்து அனுப்பினாலும் அதனையும் கண்டுகொள்ளவில்லை.

புதுவை மக்களின் உரிமைகளை, நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. உயிர்த் தியாகம் செய்தேனும் உரிமைகளைக் காப்போம். இதற்காக 4 நாட்கள் அல்ல, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போராடத் தயாராக உள்ளேன்.

படிப்படியாக புதுச்சேரியின் அதிகாரங்களைப் பறித்து தமிழகத்தோடு இணைப்பதற்காக மோடியும், கிரண்பேடியும் பல்வேறு சதிகளைச் செய்கின்றனர். ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கைகளுக்குப் பிரதமர் மோடி உறுதுணையாக உள்ளார். தற்போது அவருக்கு ஒரு விண்ணப்பம், கோரிக்கை விடுக்கிறேன். ஆளுநர் கிரண்பேடியை உடனடியாகத் திரும்பப் பெறுங்கள். கிரண்பேடியை உடனடியாகப் புதுவையை விட்டு வெளியேற்றுங்கள். புதுவையைக் காப்பாற்ற, மீட்க எந்தவித தியாகமும் செய்யத் தயாராவோம்”.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி பேசினார்.

நன்றி இந்து தமிழ் திசை