கிரண்பேடிக்கு எதிரான தர்ணா போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு; பல கட்டப் போராட்டம்: நாராயணசாமி அறிவிப்பு | Tarna protest against Kiranbedi temporarily postponed; Multi-stage struggle: Chief Minister Narayanasamy’s announcement

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக 3 நாட்கள் நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக இன்று இரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்தும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுவை மாநில காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணாசிலை மறைமலை அடிகள் சாலையில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு தொடர் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தர்ணா போராட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி இரவிலும் அங்கேயே படுத்து உறங்கி வந்தார். போராட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவு அங்கேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 3-வது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது. நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இன்று இரவு முதல்வர் நாராயணசாமி பேசுகையில், “பாஜக அல்லாத ஆட்சி புதுச்சேரியில் உள்ளதால் தொல்லை கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை எழுந்தால் அதற்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான் முழுப் பொறுப்பு. ஆட்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. மாநில மக்களின் சுதந்திரம், மற்றும் உரிமையை யார் பறிக்க நினைத்தாலும் உயிரை விடத் தயாராக இருக்கிறோம். அடுத்தடுத்துப் பல கட்டப் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.

வரும் 22-ம் தேதி கிரண்பேடியே திரும்பிப் போ என்று கையெழுத்து இயக்கமும், வரும் 29-ம் தேதி அனைத்துத் தொகுதிகளிலும் கண்டனப் போராட்டமும், பிப்ரவரி 5-ம் தேதி உண்ணாவிரதமும் நடைபெறும். இறுதியாக பிப்ரவரி 15 முதல் 20-ம் தேதிக்குள் ஒரு நாள் பந்த் போராட்டம் நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.

பொங்கல் வருவதையொட்டி, 3-ம் நாளான இன்று இரவு தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

நன்றி இந்து தமிழ் திசை