கிரண்பேடிக்கு எதிராக 2-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடரும் புதுவை அமைச்சர்: முதல்வர் நாராயணசாமி சந்திப்பு | Will Pongal gift be given for one thousand rupees

சட்டப்பேரவை வராண்டாவில் படுத்துறங்கி கிரண்பேடிக்கு எதிரான தர்ணா போராட்டத்தை இரண்டாவது நாளாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடர்கிறார். அவரை முதல்வர் நாராயணசாமி சந்தித்துப் பேசினார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும் வரை சட்டப்பேரவையில் தர்ணா போராட்டம் நடைபெறும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார்.

சட்டப்பேரவை வராண்டாவில் தரையில் படுக்கை விரித்துத் தூங்கினார். காலையில் எழுந்து சட்டப்பேரவை வளாகத்திலேயே வாக்கிங் சென்ற அவர் அங்குள்ள தனது அறையில் குளித்து, மீண்டும் வராண்டாவில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இன்று 2-வது நாளாக அமைச்சர் கந்தசாமியின் தர்ணா தொடர்கிறது. முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் அவரைச் சந்தித்துப் பேசினர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “சமூக நலத்துறையில் இருந்து ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பிய 15 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி அமைச்சர் கந்தசாமி சட்டப்பேரவையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் என்ற முறையில் தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலர் ஆகியோரை அழைத்துப் பேச உள்ளேன்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பின்னும் திட்டங்களை ஆளுநர் தடுக்கிறார். இது கிரண்பேடியின் அராஜகம். பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்தது அவர்தான். சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று குறிப்பிட்டார்.

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, “இது தொடர்பான கோப்பு நிதித்துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோப்பு தொடர்பான விவரங்கள் குறித்து நேரில் கேட்க உள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

நன்றி இந்து தமிழ் திசை