கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் போராட்டம்; நவீன ஆயுதங்களுடன் நகர் முழுவதும் குவிந்த மத்தியப் படை: மக்கள் அவதி | Protest against Kiranbedi in puduchery

கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தால் நகர் முழுவதும் மத்தியப் படையினர் நவீன ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர். முன் எப்போதும் இல்லாத வகையில் நகர் முழுவதும் போக்குவரத்தை மாற்றி முக்கியச் சாலைகளில் அனுமதிக்க மறுப்பதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிகாரம் தொடர்பான மோதல் இருந்து வருகிறது.

யூனியன் பிரதேசமான புதுவையில் ஆளுநருக்கே அதிகாரம் என்பதால் அரசின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆளுநர் கிரண்பேடி முன்பு இருந்த ஆளுநர்களை விட அதிக அளவில் தலையிட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகள், சட்டப்பேரவை அறிவிப்புகள், கொள்கை முடிவுகளில்கூட ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு உள்துறைக்கு கோப்புகளை அனுப்புகிறார். கிரண்பேடி தடையால் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கருப்புச் சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 6 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம், ஆளுநர், அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது. ஆனால், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகள்கூட நிறைவேறவில்லை.

இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி மீண்டும் ஆளுநர் மாளிகை முன்பு இன்று முதல் (ஜன.08) நான்கு நாட்களுக்கு தொடர் போராட்டம் தொடங்க முடிவு செய்தனர். ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த ஆட்சியர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகைக்குப் பதிலாக நகரப் பகுதியில் மறைமலை அடிகள் சாலையில் அண்ணா சிலையிலிருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ (எம்-எல்) உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். ஆளும் கட்சியான காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

கிரண்பேடிக்கு எதிராக போராட்டம். | படம்: எம்.சாம்ராஜ்

போராட்டம் காரணமாக 3 கம்பெனி மத்தியப் படையினர் புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் நகரப் பகுதி முழுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுடன் நகரெங்கும் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

நகரெங்கும் போக்குவரத்து நெரிசல்

போராட்டம் நடந்த மறைமலை அடிகள் சாலையெங்கும் மத்தியப் படையினர், போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். புதுச்சேரியின் இதயப்பகுதியான இச்சாலை முழுக்க முதலில் ஒரு வழியில் செல்ல அனுமதித்தனர். பழைய பேருந்து நிலையம் மட்டும் முதலில் மூடப்பட்டது. சிறிது நேரத்தில் இச்சாலையை முழுவதும் மூடியதால் புதிய பேருந்து நிலையம் செல்ல முடியவில்லை. மறைமலை அடிகள் சாலைக்கு வரும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால் நகரில் முன் எப்போதும் இல்லாத வகையில் நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல், ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் மற்றும் நகரப்பகுதி சாலைகள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. அருகிலிருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. வழிபாட்டுத் தலமான மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் செல்வதற்காக ஒவ்வொரு பாதை மட்டும் திறந்து விடப்பட்டிருந்தது. போக்குவரத்து மாற்றம் தொடங்கி அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

நன்றி இந்து தமிழ் திசை