புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 15 கோப்புகளுக்கு அனுமதி தரும் வரை சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை இன்று இரவு தொடங்கியுள்ளார்.
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், “புதுவை பஞ்சாலைகள், சர்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச விஷயங்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அனுமதி கிடைத்தவுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரைச் சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கந்தசாமியின் கடிதத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், கோரிக்கைகள் தொடர்பான விளக்கம் பெற துறைச் செயலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கோரிக்கை தொடர்பான தகவல்கள் வந்தவுடன் உங்களைச் சந்திக்கும் தேதி, நேரம் ஒதுக்கித் தரப்படும் என கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மூன்று நாட்கள் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தப் போராட்டம் இன்று இரவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வந்தார். சட்டப்பேரவை வளாகத்தில் இருக்கை போட்டு அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிய 15 கோப்புகளுக்கு முடிவு தெரியும் வரை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவேன்” என்று குறிப்பிட்டு சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.