காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் கால்நடை துறையிடம் இருந்து வருவாய் துறைக்கு மாற்றம் | Tokens for bulls

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வழக்கத்திற்கு மாறாக காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம், கால்நடை துறையிடம் இருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த முறை கரோனா கட்டுப்பாடுகளால் குறைவான காளைகளை வாடிவாசலில் களம் இறங்க வாய்ப்பு இருக்கும்நிலையில் வருவாய் துறையினர் அதிகமான காளைகளுக்கு டோக்கன் வழங்குவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் தலைமையில் அதன் மருத்துவக்குழுவினர் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை செய்து டோக்கன் வழங்குவார்கள்.

கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வந்தநிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை செய்து தகுதிச்சான்று வழங்கும் அதிகாரம் மட்டுமே கால்நடை துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் வருவாய்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையை சேர்ந்த கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்ட டோக்கன்கள் காளைகளுக்கு வழங்கப்படுகின்றன.

முன்பு கால்நடை இணை இயக்குனர், துணை இயக்குனர், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்ட டோக்கன் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், தற்போது வருவாய்துறை வசம் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் சென்றதால் அவர்கள் விழா கமிட்டிக்கும், விஐபிகள், அரசியல் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் வளர்க்கும் காளைகளுக்கு அதிகளவு டோக்கன் வழங்கியுள்ளதாகவும், அதனால், கிராமங்களில் சாதாரண விவசாயிகள், சாமாணியர்கள் வளர்க்கும் காளைகளுக்கு டோக்கன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கரோனா கட்டுப்பாடுகளால் குறைந்தளவு காளைகளே களம் இறக்க வாய்ப்பு இருக்கும்நிலையில் அதிகளவு டோக்கன்களை வருவாய்த்துறையினர் விநியோகம் செய்துள்ளதால் போட்டி நடக்கும் நேரத்தில் காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க முடியாமல் காளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி இந்து தமிழ் திசை