‘‘கார்த்தி சிதம்பரம் எம்.பி சிவகங்கை மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்,’’ என்று கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து ஒக்கூரில் மினிகிளிக்கை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: கரோனா காலத்தில் கஷ்டத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கியவர் முதல்வர். அவர் யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். பொங்கல் சமயத்தில் மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக பரிசு தொகுப்பை வழங்குகிறார்.
இந்த தொகுதி எம்பி கார்த்திசிதம்பரம் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.
ஆனால் அவர் தேர்தல் வந்ததும் காரில் வண்ண, வண்ண கொடியுடன் வாக்கு கேட்டு வந்துவிடுவார். அவரிடம் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேளுங்கள். ஆனால் நாங்களோ மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறோம், என்று கூறினார்.