காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் | Power workers in Karaikal begin a series of strikes

மின்துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து காரைக்காலில் மின்துறை ஊழியர்கள் இன்று (ஜன.11) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இம்முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று முதல் காரைக்கால் மாவட்டத்தில் மின்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி, காரைக்காலில் உள்ள மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கூடி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

”மத்திய அரசு, தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும். நாங்களாக மின் விநியோகத்தைத் துண்டிக்கமாட்டோம். ஆனால், மின் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதனைச் சரி செய்வது, மின்கட்டண வசூல் உள்ளிட்ட எவ்விதப் பணியையும் மேற்கொள்ள மாட்டோம்” என்று தர்ணாவில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மின்சாரம் மக்களுக்கான அத்தியாவசியத் தேவை என்பதால் மின் விநியோகம் தடைப்படக் கூடாது. மின்துறை சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை