கரோனா பாதிப்பால் உயிரிழந்த டாக்டர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு வலியுறுத்தல் | 50 lakhs Compensation

கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 118 அரசு மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்ததோடு, 17-பி குற்ற குறிப்பாணையும் போடப்பட்டது. தற்போது அனைத்து தண்டனைகளையும் அரசு முழுமையாக ரத்து செய்துள்ளதோடு, முந்தைய பணியிடமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மிகப்பெரிய கரோனா ஆபத்தின் போது அரசுக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருந்து, தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மறுத்து வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான 2030-ம் ஆண்டுக்கான இலக்கை முன்னதாகவே அடைந்துள்ளதாக முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சரும் பெருமையாக கூறி வருகிறார்கள். அதேநேரத்தில் அதற்கான பங்களிப்பை வழங்கியுள்ள, ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையிலான, அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது.

அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கடந்த ஆண்டு தொடக்கத்தில் பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இருப்பினும் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்துள்ளார். கர்நாடகாவில் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இங்கோ இத்தனை இழப்புகளுக்கும், வலிகளுக்கும் பிறகு நம்முடைய கோரிக்கையை அரசு நிறைவேற்ற மறுத்து வருகிறது.

கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு, கரோனா தடுப்பு பணிக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் என முதல்வரின் அறிவிப்புகள் அனைத்துமே செயல்படுத்தப்படாமல் அறிவிப்புகளாகவே உள்ளன. எனவே, முதல்வர் தெரிவித்தது போல, புத்தாண்டு பரிசாக, ஊதிய உயர்வு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நன்றி இந்து தமிழ் திசை