கரோனா பரவல் எதிரொலி: மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனம்; அரசியல் சூழ்ச்சி என எதிர்க்கட்சிகள் விமர்சனம் | Malaysia: Emergency Declared by Sultan

கரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுக்கும் காரணத்தால் மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசர நிலை பிரகடனப்படுத்துப்பட்டுள்ளது.

மலேசியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு இரண்டு வார கால லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் இன்று நள்ளிரவு முதல் வரும் 26-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் முஹீதின் யாசின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்த மன்னரிடம் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமதுவிடம் அமைச்சரவை பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட மன்னர் ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வருவதால், இக்காலகட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறாது. பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படமாட்டாது.

ஆனால், நீதிமன்றங்கள் எப்போதும் போல் இயங்கும். அவசர நிலை தொடர்பாக மாமன்னருக்கு ஆலோசனை வழங்க எம்.பிக்கள், சுகாதார அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்.

மேலும், அவசரநிலை பிரகடனத்தால் கூட்டரசு அரசாங்கம், மாநில அரசாங்க செயல்பாடுகளில் பாதிப்பு இருக்காது. பொருளாதார நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று எண்ணிக்கை குறைந்தால் இந்த அவசர நிலை எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேரும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 555 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர நிலையா? அரசியல் சூழ்ச்சியா?

மலேசியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அவசரநிலை பரவலாக விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. பிரதமர் முஹீதின் யாசின், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை தடுக்கும் நோக்கில் இந்த அவசர நிலைக்கு பரிந்துரை செய்திருக்கிறார். கரோனா போர்வையில் அரசியல் செய்கிறார் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மலேசியா முன்னாள் பிரதமர் மஹாதிர் முகம்மத்தின் மகளும் சமூக ஆர்வலருமான மரினா மஹாதீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது அவசரநிலை பிரகடனம் அல்ல. தோல்வியைப் பிரகடனம் செய்துள்ளனர். கரோனாவைக் கையாளத் தெரியவிலை என்பதைப் பிரகடனம் செய்துள்ளனரா” என்று ட்வீட் செய்துள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை