கரோனா நோயாளிகளை கண்டறிய உதவும் மோப்ப நாய்கள்

 

விமான நிலையங்களில் பணியமர்த்த முடிவு

 

மனிதர்களை விட ஒரு லட்சம் மடங்கு மோப்ப சக்திமிக்கவை நாய்கள். இதனால்தான் போதை மருந்துகள், வெடிபொருள்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், இன்னும் ஒருபடி மேலே சென்று கரோனா பாதித்த நபர்கள் வெளியிடும் சுவாசக் காற்றின் வாசனையை வைத்தே கரோனா தொற்றை அடையாளம் காணும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ஏற்கெனவே ஸ்பேனியேல்ஸ் மற்றும் ரிட்ரீவர்ஸ் இன நாய்கள் தங்கள் மோப்ப சக்தியின் வாயிலாக புற்றுநோய், மலேரியா, பார்க்கின்சன் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு சாதனை படைத்தன. இதைத்தொடர்ந்து, கரோனா பாதித்த நபர்கள் பயன்டுத்திய சாக்ஸ், முகக் கவசம், டி சர்ட் ஆகியவற்றை மாதிரியாக கொண்டு 6 நாய்களிடம் நடத்திய சோதனையில், அவை கரோனாவை வெற்றிகரமாக கண்டறிந்தன.

 

தற்போது பிரிட்டனில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் ஒன்றுகூட அனுமதியளிக்கப்பட்டிருப்பதால், மக்கள் அதிகம் கூடுமிடங்களிலும், விமான நிலையங்களிலும், பயிற்சிபெற்ற மோப்ப நாய்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விலங்குகளுக்கு பயிற்சியளித்து வரும் துப்பறியும் நாய்களுக்கான அறக்கட்டளை தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் கிளேர் கெஸ்ட் கூறுகையில், மனித வியாதிகளை வாசனையை வைத்தே கண்டறிவதில் நாய்கள் பயோசென்சார்கள் (உயிரி தணிக்கையாளர்கள்) என்பதை சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது. 100 கரோனா நோயாளிகளில் 88 பேரை நாய்கள் துல்லியமாக கண்டறிகின்றன. வெறும் 12 சதவீதம் மட்டுமே அதில் தவறுகிறது. இதன்மூலம் 300 பேர் பயணிக்கும் விமானத்தில், கரோனா பாதித்த ஒருவரை கண்டறிவது நாய்களுக்கு எளிது என்றார் அவர்.

இந்த ஆய்வு தற்போது முதல்கட்டத்தில் இருக்கிறது. ஆய்வு முடிவு வெளியாகும் முன்பாக மேலும் சில விஞ்ஞானிகள் இதை பரிசோதித்து, அங்கீகாரம் அளிப்பர். கரோனா தொற்றை மோப்ப நாய்கள் கண்டறிந்தாலும், மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படுவது நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

3 × 4 =