கரோனா தடுப்பூசி போடுவோர் மது அருந்தக் கூடாது: புதுவை சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை | Corona vaccinators should not drink alcohol

கரோனா தடுப்பூசி போடுவோர் மது அருந்தக் கூடாது என்று சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி விரைவில் பொதுமக்களுக்குப் போடப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் 16-ம் தேதி தடுப்பூசி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர். புதுவைக்கு இதுவரை தகவல் ஏதும் வரவில்லை.

புதுவையைப் பொறுத்தவரை 13 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். 7 ஆயிரம் பேர் தனியார் பணியிலும், 6 ஆயிரம் பேர் அரசுப் பணியிலும் உள்ளனர். ஊசி செலுத்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

ஊசி செலுத்த வருவோர் முதலில் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்படுவார். அவரிடம் தகவல்கள் பெறப்படும். ஆய்வுக்குப் பின் ஊசி செலுத்தும் அறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தடுப்பூசி செலுத்தப்படும். பின்னர் அவர் கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் அமர வைக்கப்படுவார். இந்த ஒத்திகை கடந்த 2, 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. ஒத்திகை அறிக்கையை டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். தடுப்பூசி செலுத்த 143 மையங்களைக் கண்டறிந்துள்ளோம்.

கரோனா தடுப்பூசிக்கான 13 ஆயிரம் பேர் கொண்டவர்களின் தகவலையும் அனுப்பி வைத்துள்ளோம். இந்தத் தடுப்பூசியை 2 முறை போட வேண்டும். முதல் தடுப்பூசி போட்டால் மட்டும் போதாது. 2-வது தடுப்பூசியும் போட்டால்தான் எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே, முதல் நாளில் ஒரு நபருக்குத் தடுப்பூசி போட்ட பிறகு, 28-வது நாளில் 2-வது தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மது அருந்தக் கூடாது”.

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

நன்றி இந்து தமிழ் திசை