கரோனா தடுப்பூசி திட்டம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை | PM Modi interacts with CMs of all states

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் மிகப்பெரிய திட்டம் வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மருந்தையும், இந்திய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்ஸின் மருந்தையும் அவசரச் சூழலுக்குப் பயன்படுத்தலாம் என மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இதையடுத்து, கடந்த 3 நாட்களாக 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், 615 மாவட்டங்களில் 4,815 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

வரும் 16-ம் தேதி தொடங்கும் தடுப்பூசி முகாமில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குக் கீழான இணைநோய்கள் கொண்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் 16-ம் தேதி உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் முகாம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் எவ்வாறு செய்துள்ளன, எவ்வாறு தயாராகியுள்ளன, மாநிலத்தில் கரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது, தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள், உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.

நன்றி இந்து தமிழ் திசை