கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை?

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கரோனா பரவல் வேகம் அதிகரித்து வருவதால், அங்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதிக்க கனட அரசு முடிவு செய்துள்ளது.

கனட நாட்டின் கொவிட் விதிமுறைகளிலிருந்து சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனடாவில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி ஆணை அல்லது அறிமுகக் கடிதம் வைத்திருந்தால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கரோனா 3ஆம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், இந்தியா உள்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதிக்க கனட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஒட்டவாவை மையமாக கொண்டு செயல்பட்டுவரும் சர்வதேச கல்விக்கான கனட ஆணையகம் வெளியிட்ட தகவலின்படி, கனடாவில் கடந்த 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, 5,30,540 வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயின்று வருவதாகவும், இதில் அதிகபட்சமாக 34% இந்தியர்கள் என்றும், சீன நாட்டினர் 22% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவை பொறுத்தமட்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் அதிகபட்சமாக 2,42,825 (46%) வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்தத் தடை குறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை கூறியது:
ஒன்டாரியோ மாகாணத்தில் பெருகிவரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அதன் முதல்வர் டக் போர்டு கேட்டுக்கொண்டதின்பேரில், அதை அரசு பரிசீலித்து வருகிறது. இதை நெறிமுறைப்படுத்துவகு குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவோம் என்றார்.
ஆனாலும், இந்தத் தடை உத்தரவு எப்போது அமலுக்கு வரும், எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது குறித்து தெளிவான வரையறை வெளியிடப்படவில்லை.

Add your comment

Your email address will not be published.

three × 1 =