கடன் செயலி மூலம் ரூ.300 கோடி லாபம்: ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் சீனர்கள் முதலீடு | loan apps

இந்தியாவில் ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம் உட்பட பல முக்கிய துறைகளில் சீனர்கள் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் கீழ் பல்வேறு பெயர்களில் கடன் செயலிகளை நடத்தி வந்த சீனாவை சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்காக சென்னை குரோம்பேட்டை அஸாகஸ் டெக்னோ என்ற நிறுவனத்தின் பெயரில் 1,600 சிம் கார்டுகள் போலி முகவரியில் வாங்கப்பட்டு, சீன கடன் செயலிகளுக்காக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. ரியா குப்தா என்ற பெண் மூலமே இவை வாங்கப்பட்டுள்ளன. அவர் யார் என்பது தெரியவில்லை.

இந்த வழக்கில் இதுவரை சீனநாட்டினர் 2 பேர், பெங்களூருவை சேர்ந்த 2 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன கடன் செயலிகளுக்கான பண முதலீடுகள் குறித்து அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.

கைது செய்யப்பட்ட சீனர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 6 நாட்கள் காவலில் எடுத்து மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் விசாரணை நடத்திவருகின்றனர். அதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன்செயலி மோசடி மூலம் ரூ.300கோடிக்கு சீன நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன. இந்த பணத்தை இந்தியாவின் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளில் சீனநிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. கைதான சீனர்களை சிங்கப்பூரில் வசிக்கும் ஹாங்க் என்ற சீனர் இயக்கி வந்துள்ளார்.

சீனர்களுக்கு உதவிய இந்தியஅரசு அதிகாரிகள் யார், வேறுஎங்கு அழைப்பு மையம் நடத்தியுள்ளனர் என பல கேள்விகள் போலீஸாருக்கு எழுந்துள்ளன.

நன்றி இந்து தமிழ் திசை