ஓம் பிரகாஷ் ராஜ்பர், ஒவைஸியுடன் இணைந்தார் பீம் ஆர்மி ஆஸாத்: உ.பி.யில் பலம் பெறும் மூன்றாவது கூட்டணி | The third alliance to gain strength

உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர் சமூகக் கட்சி தலைவரான ராஜ்பர் தலைமையுடன் உருவான மூன்றாவது கூட்டணி பலம் பெற்று வருகிறது. அசாதுத்தீன் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியடுத்து பீம் ஆர்மி சந்திரசேகர் ஆஸாத்தும் அதில் இணைந்தார்.

ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக, ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவரால் செயல்பட்டு வருவது சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி). கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 8இல் போட்டியிட்டு இக்கட்சி, 4 தொகுதிகளை வென்றது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினராகவும் இருந்தார் ஓம் பிரகாஷ். பிறகு, கடந்த வருட மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார்.

தற்போது தனது தலைமையில் இவர் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க, ’பாகிதாரி சங்கல்ப் மோர்ச்சா’ எனும் பெயரில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கினார். ஹைதராபாத்தின் எம்.பி.யான அசாதுத்தீன் ஒவைஸியின் அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிம் (ஏஐஎம்ஐஎம்) கடந்த மாதம் இணைந்தது.

இதையடுத்து, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவின் பிரகதீஷல் சமாஜ்வாதி (லோகியா) கட்சியும் சேர்ந்தது. தொடர்ந்து இக்கூட்டணியில் சந்திரசேகர் ஆஸாத் தலைமையிலான பீம் ஆர்மி கட்சியும் தற்போது இணைந்துள்ளது.

ராவண் என்றழைக்கப்படும் இந்த ஆஸாத், உ.பி.யில் தலித் சமூகத் தலைவராக உருவாகி வருகிறார். இங்குள்ள சஹரான்பூரில் 2017இல் ஆஸாத் நடத்திய தலித் பேரணியில் உயர் சமூகத்தவரான ராஜ்புத்தினருடன் மோதலாகி கலவரம் மூண்டது.

இதனால், உ.பி.யில் உயிர் பலியும் ஏற்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஆஸாத் கைதானார். இதைத் தொடர்ந்து தலித் சமூகத்தினர் இடையே பிரபலமானவருக்குக் கடந்த செப்டம்பர் 2018இல் ஜாமீன் கிடைத்தது.

இவர், ‘பாஜக ஏஜெண்ட்’ எனக் குற்றம் சுமத்தும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போட்டியாகி வருகிறார். உ.பி.யின் முகம்மது அயூப் தலைமையிலான சிறிய முஸ்லிம் கட்சியான பீஸ் பார்ட்டி (அமைதி கட்சி) யும் ராஜ்பரில் மூன்றாவது அணியில் இணைந்துள்ளது.

இந்த அணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க் கிழமை) பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் கூடி ஆலோசனை செய்ய உள்ளனர். இக்கூட்டணியில், மேலும் சில சிறிய கட்சிகளும் இணையும் வாய்ப்புகள் உள்ளன.

மூன்றாவது கூட்டணியில் நிதிஷ்?

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இக்கட்சியின் அதிகமுள்ள குர்மி சமூகத்தினர் உ.பி.யில் கணிசமாக வசிக்கின்றனர்.

இவர்களது வாக்குகளைக் குறிவைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ள கட்சியையும் தம்முடன் இழுக்க மூன்றாவது கூட்டணி திட்டமிடுகிறது. இதற்கு, பிஹாரில் மட்டும் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ள நிதிஷ், அம்மாநிலத்திற்கு வெளியே தனியாகவே பிரிந்திருப்பது காரணம்.

பாஜகவிற்கு ஆதரவாக வாக்குகள் பிரிவு

எனினும், இக்கூட்டணியால் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் உ.பி.யில் பிரியும் நிலை அதிகமாகி உள்ளது. ஏனெனில், இம்மாநிலத்தின் முக்கியக் கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாகப் போட்டியிட உள்ளன.

நன்றி இந்து தமிழ் திசை