ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி கிடைத்தும் பயன்பாட்டுக்கு வராத சிவகங்கை நறுமண பூங்கா: பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வீண் | Aromatic Park

சிவகங்கை நறுமணப் பூங்காவுக்கு (ஸ்பைசஸ் பார்க்) 7 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நகர் ஊரமைப்பு இயக்குநரகம் அனுமதி கிடைத்தும் பயன்பாட்டுக்கு வராத நிலை உள்ளது. இதனால் பல கோடி ரூபாய் மதிப் பிலான இயந்திரங்கள் வீணாகி வருகின்றன. மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் சார்பில், மாநிலத்துக்கு ஒரு நறுமணப் பூங்கா தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மிளகாய், மஞ்சள், வாசனைப் பொருட்களுக்கான நறுமணப் பூங்கா அமைக்க 2008-ம் ஆண்டு சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதற்குத் தேவையான 73 ஏக்கர் நிலத்தை மத்திய நறுமணம் வாரியத்துக்கு மாநில அரசு தானமாக வழங்கியது. தொடர்ந்து 23 ஏக்கரில் ரூ.28 கோடி யில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள், சீதோஷ்ண நிலை கட்டுப்பாட்டு அறை, சுத்தம், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. மேலும் வியாபாரிகள் கிடங்குகள் அமைக்க 50 ஏக்கர் தனியாக ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் நறுமணப் பூங்கா கட்டுவதற்கு மாநில நகர் ஊரமைப்பு இயக்குநரகத்திடம் அனுமதி பெறாமலேயே இந்தப் பூங்காவை 2013-ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

இந்தப் பூங்கா மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும், ரூ.1,500 கோடிக்கு வரத்தகம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இங்கு கிடங்குகள் அமைக்க தலா ரூ.5 லட்சம் செலுத்தி 28 வியாபாரிகள் விண்ணப்பத்திருந்தனர். பூங்கா திறக்கப்பட்ட நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் மாறின.

இதனால் மாநில நகர் ஊரமைப்பு இயங்குநரகத்திடம் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. அனுமதி கிடைக் காததால் வியாபாரிகள் கிடங்குகளை அமைக்க முடியவில்லை. இதையடுத்து விவசாயிகளும் மிளகாய், மஞ்சளை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியதை அடுத்து அதிமுக எம்.பி.,க்கள் குழு 2016-ம் ஆண்டு ஆக.31- ல் நறுமணப் பூங்காவில் ஆய்வு நடத்தியது. அதன்பிறகும் அனுமதி கொடுக்க நகர் ஊரமைப்பு இயக்குநரகம் மறுத்து வந்தது.

இந்நிலையில் பல்வேறு அமைப் பினரின் கோரிக்கையையடுத்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் அனுமதி வழங்கியது. இதற்கிடையில் கிடங்கு அமைக்க விண் ணப்பித்திருந்த வியாபாரிகளில் சிலர், தற்போது கிடங்கு தொடங்கத் தயாராக இல்லை. மேலும் இயந்திரங்களும் பராமரிப்பின்றி துருப்பிடித்து காணப் படுகின்றன.

இந்நிலையில் அனுமதி கிடைத்தும் நறுமணப் பூங்கா பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் விவசா யிகள், வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து நறுமண வாரிய துணை இயக்குநர் அஜய் கூறியதாவது: மாநில நகர் ஊரமைப்பு இயக்குநரகத்தின் அனுமதி சில மாதங்களுக்கு முன்பு தான் கிடைத்தது. பூங்காவை செயல் பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனாவால் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மார்ச்சுக்குள் பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நன்றி இந்து தமிழ் திசை