ஏப்ரல் 17 இல் இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம்

இளவரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தனது 99 ஆவது வயதில் மறைந்தார். அவரது உடல் வின்ட்ஸர் காஸ்டிலில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் சனிக்கிழமை (ஏப்ரல் 17) நடைபெறுகிறது. இதையொட்டி, வின்ட்ஸர் காஸ்டில் தேவாலயத்திலிருந்து புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு மேம்படுத்தப்பட்ட லேண்ட் ரோவர் வாகனத்தில் வைத்து அவரது உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

வாகனத்தின் இருபுறமும் பிலிப்பின் பிள்ளைகளான இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்டு மற்றும் இளவரசி ஆநி ஆகியோரும், பேரப் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோரும், ஜெர்மனி உறவினர்கள் என 30 பேர் செல்கின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் நபர்கள் ராணுவ சீருடையை தவிர்த்து, மெடலுடன் கோட் அல்லது பகல்நேர உடை அணிந்திருப்பர். கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தின்போது இளவரசி எலிசபெத் தனியாக அமர்த்தப்படுகிறார்.

தற்போதைய பொது சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்டு, இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என்றும், ராணுவத்தின் மீதான பிலிப்பின் பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக இறுதி ஊர்வலம் திகழும் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு பிலிப்பின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்கான விருந்தினர்களை தேர்வு செய்வதில் இளவரசி சில கடினங்களை எதிர்கொண்டதாகவும், இளவரசரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டுமென அவர் விரும்பியதாகவும் அந்த செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

Add your comment

Your email address will not be published.

17 − 4 =