எளிமைப்படுத்தப்பட்டது அயலக இந்திய குடியுரிமை விதிமுறைகள்

அயலக இந்திய குடியுரிமை அட்டைக்கான விதிமுறைகளை இந்திய உள்துறை அமைச்சகம் எளிமைப்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியினரும், அவர்களது மனைவியும் இந்தியாவில் காலவரையறையின்றி வசிக்கவோ, பணிபுரியவோ வழங்கப்படுவது அயலக இந்திய குடியுரிமை அட்டை (ஓசிஐ). இந்திய உள்துறை அமைச்சகத்தால் பிறப்பிக்கப்படும் இந்த அட்டை, குடியுரிமையாக கருதப்பட மாட்டாது என்ற போதிலும், பிற வெளிநாட்டினருக்கு கிடைக்காத சலுகைகள், ஓசிஐ அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும். எனினும், இதை வைத்து இந்திய தேர்தல்களில் வாக்களிக்க இயலாது.

20 வயதுக்கு உள்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு முறை புதிய பாஸ்போர்ட் வழங்கும்போதும், முக வேறுபாட்டை அடையாளம் காண ஓசிஐ அட்டை புதுப்பிக்கப்படுவது வழக்கம். இப்போது 20 வயதுக்கு முன்பாக ஓசிஐ அட்டைதாரராக விண்ணப்பித்த நபர், 20 வயதைக் கடந்ததும் ஒரே ஒரு முறை மட்டும் ஓசிஐ அட்டையை புதுப்பித்தால் போதுமானது. 20 வயதுக்கு மேற்பட்ட ஓசிஐ அட்டை பெற்ற நபர்கள், அதை மீண்டும் புதுப்பிக்க தேவையில்லை.

ஆனாலும், தங்களது புகைப்படத்தை தாங்கிய பாஸ்போர்ட் நகலையும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போதும், ஓசிஐ வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஒருமுறை பதிவேற்றம் செய்யலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதல் பெற்ற அந்த வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்ட 3 மாதத்துக்குள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்திய வம்சாவளியினரை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினர், ஓசிஐ அட்டைதாரராக விண்ணப்பிக்கும்பட்சத்தில், அவர்களது சமீபத்திய பாஸ்போர்ட் நகலை பதிவேற்றம் செய்வதுடன், திருமண வாழ்க்கை இன்னமும் நீடிக்கிறது என்பதற்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும்.

 

இதையும் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்ட 3 மாத காலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும், புதிய விவரங்கள் இணையதளத்தில் மேம்படுத்தப்பட்டு அதற்கான ஒப்புகை விவரம் ஓசிஐ அட்டை விண்ணப்பதாரர்களுக்கு இ}மெயில் வழியாக அனுப்பிவைக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, 37 லட்சத்து 72 ஆயிரம் ஓசிஐ அட்டைகள் இந்திய அரசால் விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

5 × 5 =