என் வீட்டில் சோதனை நடக்கவில்லை செந்தில் பாலாஜி மழுப்பல்
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டுக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த லேப்டாப், ஆவணங்களை அதிகாரிகள் எடுக்க வந்தபோது அவர்களை திமுகவினர் சுற்றி வளைத்தனர். குறிப்பாக பெண் அதிகாரி ஒருவரிடம் ஐ.டி.கார்டை காட்டச் சொல்லி தொண்டர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.
மேலும் அதிகாரிகள் வந்த காரும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் சோதனை நடத்த முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர். அதேசமயம் அதிகாரிகள் தங்களை தாக்கியதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேராக காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்ற அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அதிகாரிகள் சோதனை நடத்தப் போவது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கரூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்ட நிலையில், இதில் 7 இடங்களில் தொண்டர்கள் இடையூறால் சோதனை நடத்த முடியவில்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையால் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடக்கவிருந்த மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சோதனை நடைபெறும் இடங்களுக்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் செந்தில் பாலாஜிக்கு உறவினருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் வீடுகளில் சோதனை நடக்கிறது. இதேபோல் கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் அமைந்துள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார். இவர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னுடைய வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
“எனது சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது” என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings