எனது வருகையை 12 முறை தடுத்தார் அகிலேஷ் யாதவ்: உ.பி. வந்த ஒவைஸி சமாஜ்வாதி மீது விமர்சனம் | u.p.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுத்தீன் ஒவைஸி இன்று உத்தரப்பிரதேசத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது அவர், தனது வருகை 12 முறை தடுத்ததாக முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் மீது குற்றம் சுமத்தி உள்ளார்.

இன்று காலை வாரணசியின் விமான்நிலையம் வந்திறங்கிய ஒவைஸி கூறும்போது, ‘இதற்கு முன் நான் 12 முறை உ.பி. வர முயன்ற போது முதல்வர் அகிலேஷ் அரசால் தடுக்கப்பட்டேன். இதனால், நான் எனது பயணத்தை 28 முறை மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று.

இப்போது முதன்முறையாக எந்த பிரச்சனையுமின்றி வர முடிந்தது. இங்கு நான் நட்பு பாராட்ட வந்துள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யில் 2022 இல் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அம்மாநிலத்தின் பிற்படுத்த வகுப்பு தலைவர்களில் ஒருவரான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டணியில் ஒவைஸியுடன், சமாஜ்வாதி நிறுவரான முலாயம்சிங்கின் சகோதரரும் பிரகதீஷல் சமாஜ்(லோகியா) கட்சியின் தலைவருமான ஷிவ்பால்சிங் யாதவ், பீம் ஆர்மி கட்சியின் ராவண் என்கிற சந்திரசேகர ஆஸாத் மற்றும் அமைதி கட்சியின் முகம்மது அயூப் ஆகியோர் இணைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் உ.பி.யிலும், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி மக்களவை தொகுதியிலும் ஒவைஸி வருகை புரிந்துள்ளார். இதனால், அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையான விமர்சனம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் உ.பி.யில் பாஜகவின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங்கை விமர்சித்துள்ளார். உ.பி.யின் கிழக்கு பகுதி மாவட்டங்களில் தனது கட்சியினரை சந்தித்த பின் மூன்றாவது கூட்டணியின் தலைவரான ஓம் பிரகாஷுடனும் ஆலோசனை செய்கிறார் ஒவைஸி.

வாரணாசியில் இறங்கிய ஒவைஸி, ஜோன்பூர் சாலை வழியாக மாவ் மற்றும் ஆசம்கருக்கு சாலைவழியாக வாகனத்தில் செல்கிறார். இவருக்கு ஓம் பிரகாஷின் கட்சியினர் வழிநெடுக வரவேற்பு அளித்து கவுரவித்துள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை