உலகம் முழுவதும் 1 லட்சம் பேர் பங்கேற்கும் விர்ச்சுவல் தமிழ் மாரத்தான் தொடக்கம்: 118-வது மாரத்தானை நிறைவு செய்த மா.சுப்பிரமணியன் | virtual tamil marathon

உலகின் பல்வேறு நாடுகளிலும் 1 லட்சம் பேர் பங்கேற்கும் விர்ச்சுவல் தமிழ் மாரத்தான் போட்டி நேற்று தொடங்கியது.

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, தமிழ் கலைகள், கலாச்சாரம், பண்பாட்டுக்கு புத்துயிர் கொடுக்கவும், தமிழக கிராமங்களில் மருத்துவ, கல்வி வசதிகளை மேம்படுத்தவும் நிதி திரட்டும் நோக்கில் ‘விர்ச்சுவல் தமிழ்மாரத்தான்- 2021’ போட்டி ஜனவரி 10-ம் தேதி (நேற்று) முதல் வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மொத்தம் 1 லட்சம் தமிழர்கள், தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பற்றுகொண்ட பலரும் இதில் கலந்து கொள்கின்றனர். அவரவர் தங்கள் பகுதியிலேயே ஓடுவதற்கேற்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க குறைந்தபட்சகட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இத்தொகை முழுவதும் 50 தமிழக கிராமங்களின் தேவைகளுக்காகவும், தமிழக கிராமியக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு இ-பேட்ஜ் மற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான மின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் விர்ச்சுவல் தமிழ் மாரத்தான் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியனும் இந்த சிறப்பு மாரத்தானில் பங்கேற்றார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ள அவர், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டார். அதில் இருந்து குணமடைந்த பிறகு, விர்ச்சுவல் தமிழ்மாரத்தானில் அவர் பங்கேற்றுள்ளார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் கிண்டியில் தொடங்கி சோழிங்கநல்லூர் அக்கரை வரையில் 21.1 கி.மீ. தூரம் ஓடி தனது 118-வது மாரத்தானை நிறைவு செய்தார். அவருடன் அவரது நண்பர்கள்வே.ஆனந்தம், எஸ்.ஏ.அரிகிருஷ்ணன், ராம், மூர்த்தி, என்.சஞ்சீவி, மடிப்பாக்கம் சே.சிந்தன், விஸ்வா உள்ளிட்டோரும் மாரத்தானில் பங்கேற்று ஓடினர்.

நன்றி இந்து தமிழ் திசை