உருகும் பனிக்கட்டிகளை ‘போர்வை’ கொண்டு மூடும் சீனா.. ஆய்வாளர்களின் வித்தியாசமான முயற்சி..

பருவநிலை மாற்றத்தால் வேகமாக பனிக்கட்டிகள் உருகுவதைத் சீன ஆய்வாளர்கள் போர்வையைக் கொண்டு மூடி வருகின்றனர். பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால், பனிக்கட்டிகள் வேகமாக உருகி, கடல் மட்டத்தையும் அதிகரித்து வருகின்றன. பனிக்கட்டிகளை வேகமாக உருகுவது காலநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதால், அதனை தடுக்க உலகளவில் ஆய்வாளர்கள் மிகப்பெரிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சீன ஆய்வாளர்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க, போர்வைகளை கொண்டு மூடி வருகின்றனர்.

பொதுவாக வெப்பத்தை தக்க வைக்க போர்வைகள் பயன்படுத்தப்படும் நிலையில், பனிக்கட்டி உருகுவதை எப்படி தடுக்க முடியும்? என உங்களுக்கு கேள்வி எழலாம். ஆனால், நீங்கள் நினைக்கும்படியான போர்வை அல்ல அது. மிகவும் விலை உயர்ந்த மற்றும் தரத்தினால் மேம்பட்ட, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஜியோடெக்ஸ்டைல் (geotextile) போர்வையாகும். இந்த போர்வையை, பருவநிலை மாற்றத்தால் வேகமாக உருகி வரும் பனிக்கட்டிகளின் மீது போடும்போது, அவற்றின் உருகும் தன்மை மெதுவாகும். மேலும், சூரிய ஒளியில் இருந்து பனிக்கட்டிகளை பாதுகாக்கும் கேடயமாகவும் இந்த போர்வைகள் செயல்படுகின்றன. 

இருப்பினும், பனிக்கட்டிகள் ( Glacier) மீது போடப்படும் இதுபோன்ற போர்வையால் அவை உருகுவதை தடுக்க முடியும் என்பது இதுவரை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புவி வெப்பத்தால் பனிக்கட்டிகள் வேகமாக உருகினாலும், சூரிய ஒளியினால் பனிக்கட்டிகள் உருகுவதை மெதுவாக்க போர்வைகள் பயன்படுவதாக இன்ஸ்டியூட் ஆப் நார்த்வெஸ்ட் எக்கோ – என்விரான்மென்ட் ( Northwest Institute of Eco-Environment and Resources) ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

ஆய்வாளர் வாங்க் பெய்டெங் (Wang Feiteng) தலைமையிலான குழுவினர், கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முயற்சியை கையில் எடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். 

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஜியோடெக்ஸ்டைல் (geotextile) போர்வைகளை 500 ச.மீட்டர் அளவில் உருவாக்கியுள்ள அவர்கள், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சூவான் (Sichuan) மாகாணத்தின் டாகு பகுதியில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஆய்வாளர் வாங்க் பெய்டெங் (Wang Feiteng), அந்தப் பகுதியில் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிலான ஐஸ் கட்டிகள் உருகியிருக்கும் என தெரிவித்துள்ளார். தற்போது அவை பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஆய்வாளர் வாங்க் பெய்டெங் கூறியுள்ளார்.  இந்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சுவிசர்லாந்து (Switzerland) நாட்டில் 2009 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரோனே (Rhone Glacier) பகுதியில் தெர்மல் போர்வைகள் போர்த்தப்பட்டு, பனி உருகுவது மெதுவாக்கப்பட்டு வருகிறது.