ஈழ மண்ணில் பிரபாகரன் விதைத்த உணர்வு ஒரு போதும் சாகாது வைகோ பேச்சு
ஈழ மண்ணில் பிரபாகரன் விதைத்த உணர்வு ஒரு போதும் சாகாது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது .தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதல்வர் மு. க .ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். அதில் அவர் வெற்றியுடன் திரும்புவார். எதிர்க்கட்சிகள் ஏதாவது விமர்சனம் செய்ய வேண்டும் என்றே நோக்கில் பேசுகின்றனர்.
ஈழ மண்ணில் பிரபாகரன் விதைத்த உணர்வு ஒரு போதும் சாகாது; தொடர்ந்துகொண்டே இருக்கும். கனடா அரசு ஈழப்படுகொலை என கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை கண்டனம் தெரிவித்தும் அந்த நாடு பொருள்படுத்தவில்லை.
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது மதிமுகவின் கோரிக்கை மட்டும் இல்லை. இதற்காக மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டதுடன், எங்கள் கிராமத்தில் எனது தாயார் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தையும் மதிமுக நடத்தியது. எங்களது ஊரில் டாஸ்மாக் கடை இருக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுள்ளோம்.
தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளை குறைக்க போவதாக அறிவித்திருக்கிறது. அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால்தான் கள்ளச்சாராயம் பெருகி, அந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டுதான் திறக்க வேண்டும். பிரதமர் திறந்துவைப்பது மிகப்பெரிய தவறு; அது அரசியல் ஆகிவிடும். அதன் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கெடுக்க போவதில்லை என்ற கருத்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.