இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு 8,36,718 ஆக அதிகரிப்பு | The COVID-19 cases in Indonesia rose by 8,692

இந்தோனேசியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,36,718 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,692 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,36,718 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து தலைநகர் ஜகர்த்தாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 34 மாகாணங்களிலும் கரோனா பரவியுள்ளதால், பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டது.

கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது. இந்நிலையில், பைசர் கரோனா தடுப்பு மருந்து மற்றும் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தோனேசியா செலுத்த உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவூதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை