இந்தியா வருகிறது Elon Musk-ன் Tesla: Bengaluru-வில் துணை நிறுவனம் பதிவு

எலன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா பெங்களூரில் ஒரு துணை நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. டெஸ்லா இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி ஆலை மற்றும் ஆர் அண்ட் டி பிரிவை உருவாக்கத் தயாராகி வருகிறது.

டெஸ்லா மோட்டார்ஸ் இந்தியா & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்டுள்ள இந்நிறுவனம், நாட்டில் தனது அணியின் ஒரு பகுதியாக வைபவ் தனேஜா, வெங்கட்ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகிய மூன்று இயக்குநர்களை நியமித்துள்ளது. இது ஒரு தனியார் அன்லிஸ்டட் நிறுவனமாகும். இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக 15,00,000 ரூபாயையும் கட்டண மூலதனமாக 1,00,000 ரூபாயையும் கொண்டுள்ளது.

இந்த அறிவிப்பு டெஸ்லாவின் (Tesla) இந்திய வருகையை அதிகாரப்பூர்வமாக குறிக்கிறது. நிறுவனம் தனது உற்பத்தித் தளத்தை கர்நாடகாவில் (Karnataka) அமைக்குமா, அல்லது, உற்பத்தித் தளம் எங்கு உருவாக்கப்படும் என்ற கேள்வி தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உற்பத்தி ஆலைகளை தங்கள் மாநிலத்தில் உருவாக்க மற்ற மாநிலங்களும் டெஸ்லாவை ஈர்க்க முயற்சிக்கலாம். இறுதியாக எங்கு இந்த தளம் அமையும் என்பதை தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

சமீபத்தில் அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸை பினுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய செல்வந்தராக மாறிய எலன் மஸ்க், வெளிநாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஒரு மிகப் பெரிய ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். இதனால் டெஸ்லா மற்றும் அதன் தயாரிப்புகளுக்கான தேவை இந்தியாவில் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) டிசம்பர் மாதம் ஒரு உள்ளூர் செய்தித்தாளிடம் அமெரிக்க மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லா முதலில் இந்தியாவில் விற்பனையில் மட்டும் ஈடுபடக்கூடும் என்றும், பின்னர் அசெம்ப்ளி மற்றும் உற்பத்தியைப் பற்றி நிறுவனம் யோசிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.