இந்தியாவுக்கு வர முடியவில்லை.. மோடியிடம் வருத்தம் தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்!

லண்டன்: குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியாமல் போனதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது. இந்திய குடியரசுத் தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கலந்து கொண்டார். 

இந்த நிலையில் இந்த ஆண்டு குடியரசுத் தின விழா கொண்டாட்டத்திற்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்தது. அவரும் இந்தியாவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்போதுள்ள கொரோனாவை விட இது வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் இவரது இந்திய பயணம் ரத்தாகுமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவலை லண்டனில் இருந்தே கண்காணிக்க வேண்டி இருப்பதால் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினாராம். அப்போது குடியரசுத் தினவிழாவுக்கு வருகை தர முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.