இந்தியாவுக்கு உதவ பிரிட்டன் வம்சாவளியினர் முடிவு

 

கரோனா தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள இந்தியாவில், டாக்டர்களுக்கு உதவ இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரிட்டன் வம்சாவளி டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பிரிட்டிஷ் இந்திய வம்சாவளி மருத்துவ சங்க உறுப்பினர் பராக் சிங்கால் கூறியது:
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஐ.சி.யு.வில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது என இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்காக எங்களால் முடிந்த அளவுக்கு நிதி திரட்டி வருகிறோம். எங்கள் சங்கத்தின் தொலைதூர மருத்துவ சேவைக்காக இதுவரை 250 தன்னார்வலர்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க முயற்சிக்கிறோம்.
சி.டி. ஸ்கேன் முடிவுகளை ஆராய்வது தன்னார்வலர்களின் தலையாய பணி. ஏனென்றால், தினந்தோறும் ஏராளமானோர் இந்தியாவில் ஸ்கேன் எடுக்கின்றனர். ஆனாலும், முடிவு தெரிவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதில், தன்னார்வலர்கள் உதவுவர்.
இந்தியாவில் பெரும்பாலானோர் பதற்றமான மனநிலையில் இருப்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மேலும், அவர்களால் வீடுகளிலேயே தனிமையில் சிகிச்சை பெற இயலும் என்கிற நிலை இருக்கும்போது, மருத்துவமனைகளில் படுக்கைகளை நாடுவதுதான் பதற்ற நிலைக்கு காரணம்.

இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வம்சாவளி டாக்டர்களின் உதவியுடன், இந்திய டாக்டர்கள் வாயிலாக வீட்டில் இருந்தபடியே அவர்களால் சிகிச்சை பெற முடியும். அவர்களுக்கு மெய்நிகர் வார்டு எனும் காணொலி வாயிலாக தகுந்த ஆலோசனைகள் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த மெய்நிகர் வார்டு திட்டம் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது. இதை பயன்படுத்துவதற்கு இந்தியாவில் ஏராளமான மருத்துவமனைகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன என்றார்.

Add your comment

Your email address will not be published.

nine + 17 =