இணையத்தில் ‘மாஸ்டர்’ காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி | master scenes leaked in internet

‘மாஸ்டர்’ காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். ஜனவரி 13-ம் தேதி அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. தினமும் மாலையில் ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டு வருகிறது. ட்ரெய்லர் இல்லை என்பதால், தினமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை முன்வைத்து ப்ரோமோ வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், திடீரென்று இன்று (ஜனவரி 11) மாலையில் ‘மாஸ்டர்’ காட்சிகள் இணையத்தில் லீக்கானது. அதில் காரில் நாசருடன் விஜய் பேசிக் கொண்டு வரும் காட்சியும், அர்ஜுன் தாஸுடன் விஜய் சட்டையின்றி அமர்ந்து பேசி வரும் காட்சியும் வெளியாகியுள்ளது. எங்கிருந்து, எப்படி லீக்கானது என்று படக்குழுவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டில் திரையிடப்பட்ட விநியோகஸ்தர்கள் காட்சியிலிருந்து லீக்காகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் உழைப்பு தயவு செய்து யாரும் அக்காட்சிகளைப் பகிர வேண்டாம், இன்னும் ஒரு நாளில் ‘மாஸ்டர்’ உங்களுடையது என்று தயாரிப்பு நிறுவனமும் இயக்குநரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை