ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்: 23 பேர் பலி | Attacks in Afghanistan left at least 23 civilians and security forces dead,

ஆப்கானிஸ்தானில் உருஸ்கன் மாகாணத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 23 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் உருஸ்கன் மாகாணத்தில் இன்று (வியாழன்) கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பலியானவர்களில் பொது மக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவ்வப்போது ஆப்கன் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டு வெடிப்புச் சம்பங்களில் தாலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், இன்று கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

நன்றி இந்து தமிழ் திசை